கர்ப்பிணி பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவிட் – 19 தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேயமுனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோவிட் – 19 தடுப்பூசி குறித்து பொது மக்கள் தேவையற்ற அச்சம்கொள்ளத் தேவையில்லலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“நாள்பட்ட சுகாதார நிலைமைகள் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு அச்சமடைய கூடாது.
இருப்பினும், கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள் உள்ளவர்கள் தடுப்பூசி பெறுவதற்கு முன்பு அந்தந்த மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, கொழும்பில் கோவிட் – 19 தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற அதிகாரிகள் 875 பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டதாக வைத்தியர் ருவன் விஜேயமுனி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெற்ற பிறகு, அவர்களுக்கு லேசான காய்ச்சல், பசியின்மை, உடல் வலி, மூட்டு வலி மற்றும் லேசான தலைவலி ஏற்பட்டன. எனினும் ஆபத்தான நிலைமை எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிக்க பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment
0 Comments