சூர்யா மாதிரியாவது மக்களுக்காக குரல் கொடுக்கட்டும் பிறகு, விஜய் அரசியலுக்கு வரட்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சீமான். அப்போது அவரிடம், விஜய் ரசிகர்கள் உங்களை விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டி உள்ளார்களே, அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.இதற்கு சீமான் பதில் அளித்து கூறிய பேட்டி முழு விவரம் இதோ:
எல்லாம் என் தம்பிகள்தான்
விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்து என்ன ஆகிவிடப்போகிறது? எல்லாம் நம்ம தம்பிகள்தான். ஏதோ, அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். நாம் தமிழர் கட்சி பதிலுக்கு ஏதாவது செய்ததா? இது அரசியல் கிடையாது. நடிப்பதை மட்டுமே தகுதியாக வைத்துக் கொண்டு அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் கூறியபோது, இது விஜய்க்கும் பொருந்துமா என்று ஒரு நிருபர் கேட்டார். அனைவருக்கும் பொருந்தும் என்று நான் சொன்னேன்.
தமிழர்களில் யாரும் முன்மாதிரி இல்லையா?
இப்போது கூட நான் எம்ஜிஆரை பற்றி பேசி இருக்க மாட்டேன். ஆனால் அவரை முன்மாதிரியாக இப்போது அரசியலுக்கு வருவோர் சொல்வதால், நான் எம்ஜிஆர் ஆட்சி பெரிய அளவுக்கு தமிழகத்துக்கு நல்லது செய்யவில்லை என்று தெரிவித்து இருந்தேன். முன்னுதாரணமாக காமராஜரை சொல்லுங்கள். கக்கனை சொல்லுங்கள். நல்லகண்ணு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர்களைத் தாண்டி புனிதர்கள் இருந்தால் சொல்லுங்கள். தமிழர்களில் யாருமே முன்மாதிரி கிடையாதா? எம்ஜிஆர் மட்டும்தானா?
சூர்யா அளவுக்காவது குரல் கொடுக்கட்டும்
புரியாத தம்பிகள் சிலர் என்னை விமர்சனம் செய்வார்கள். தொடக்க காலத்திலிருந்து தம்பி விஜய் மீது எனக்கு பேரன்பு உண்டு. அவரை எப்படி தற்காத்து நின்றேன் என்பது உங்களுக்கு தெரியும். மற்றவர்களை மாதிரி கிடையாது. விஜய் எனக்கு தம்பி. குறைந்தபட்சம் சூரியா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்க வேண்டும். அவர் புகழ் வெளிச் சத்துக்கு ஏற்ப மக்களுக்காக நிற்க வேண்டும்.
சினிமா கவர்ச்சி மட்டும் வேண்டாம்
விஜய் அரசியலுக்கு வரட்டும். வரவேண்டாம் என்று சொல்ல சொல்லவில்லை. மக்களுக்காக நின்று களத்தில் போராடி, மக்களின் நன்மதிப்பைப் பெற்று வாருங்கள். வெறும் கவர்ச்சி கொண்டு அரசியலுக்கு வந்து, நாட்டை ஆளவேண்டும் என்று திரைக் கவர்ச்சியை வைத்துக் கொண்டு வராதீர்கள். அது என் தம்பி விஜய்க்கும் பொருந்தும்.
மக்கள் அங்கீகரிக்காவிட்டாலும் பரவாயில்லை
உள்ளாட்சியில் தான் நாங்கள் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே அதிகமான வாக்குகளை பெற்றுள்ளோம். நாம் தமிழரை மக்கள் அங்கீகரிக்காவிட்டால் கூட பரவாயில்லை. மக்களுக்காக சேவை செய்கிறேன் என்பது எனக்கு ஒரு ஆத்ம நிறைவு. என்னை வெற்றி பெற வைத்தாலும், தோற்க வைத்தாலும் என் மக்களை நேசித்து நான் உளச்சான்றுடன் வேலை செய்கிறேன். அது மட்டும் போதும். நான் பிறந்த பயனையும், பிறந்த கடனையும் செய்துவிட்டேன். இதில் மக்களை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு
இரு தினங்கள் முன்பு செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்தபோது, திரை கவர்ச்சியை மட்டுமே நம்பி ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு அரசியலில் கிடைக்கும் அடி வேறு எந்த நடிகரும், அரசியலுக்கு வர யோசிக்க வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அப்போது இது விஜய்க்கும் பொருந்துமா என்று நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ஆம் அவருக்கும் பொருந்தும் என்று கூறினார் சீமான்.
இதற்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சில ஊர்களில், சீமானுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments