பிரபல இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் (75) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். ஏ.ஆர். ரஹ்மான் திரையிசையில் பல சாதனைகள் புரிந்ததற்குப் பக்கபலமாக இருந்தவர் அவருடைய தாய் கரீமா பேகம். பல பேட்டிகளில் தனது தாயாரைப் பற்றி மிக உயர்வாகப் பேசியிருக்கிறார் ரஹ்மான். சமீபத்தில் ஒரு பேட்டியில் தாயாரைப் பற்றி ரஹ்மான் கூறியதாவது:
என்னுடைய தாய் சூப்பர் ஸ்டார். நான் ஸ்டூடியோ ஆரம்பித்தபோது இசைக்கருவிகள் வாங்க என்னிடம் பணம் இல்லை. ஒருவர் என்னுடன் இணைந்து வியாபாரம் செய்ய முன்வந்தார். ஆனால் என் தாய் இதை ஏற்கவில்லை. ஸ்டூடியோவைத் தனியாகத் தொடங்கச் சொன்னார். சில வருடங்கள் கழித்து, அது சரியான முடிவாக எனக்குத் தெரிந்தது. என் அம்மா எப்போதும் இதைச் சொல்வார், வருமானத்தில் முழுமையாகச் செலவு செய்யக்கூடாது. பாதி மட்டும் செலவு செய்து மீதி பாதியைச் சேமித்துக்கொள்ள வேண்டும். ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அந்தச் சேமிப்பு உதவும் என்பார். இதுபோன்ற அறிவுரைகள் இக்கட்டான காலக்கட்டங்களில் எனக்கு உதவியுள்ளது. நான் தயங்கும் வேளைகளில் தீர்க்கமான முடிவுகளை அவர் எடுப்பார். மிகவும் தைரியசாலி. கடந்த ஆறு ஏழு வருடங்களாக உடல்நலமின்றி சிகிச்சை எடுத்து வருகிறார். இப்போதும் முடிவுகள் எடுக்கும்போது அவருடைய ஆலோசனைகள் எனக்கு உதவியாக இருக்கின்றன என்றார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். ட்விட்டரில் தனது தாயாரின் புகைப்படத்தை ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
ரஹ்மானின் தாயார் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
Post a Comment
0 Comments