கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கிறார்கள். இப்போது ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரை காக்க என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லியின் அடையாளமாக திகழும் நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கிவிட்டது. அதில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, ரூ.971 கோடி ரூபாய் செலவில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அதன் அருகிலேயே கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கட்டிடத்தின் கட்டுமான பணியை, 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டுமான பணிக்கு தடை விதித்தது. இருப்பினும், பூமி பூஜை நடத்தலாம் என்று அனுமதி அளித்தது.
இதன்படி புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு டிசம்பர் 10ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டினார். பூமி பூஜையையும் நடத்தினார். 2022ம் ஆண்டுக்குள் கட்டுமான பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் அந்த ஆண்டில், புதிய நாடாளுமன்றம் தயாராகி விடும் என்று கூறப்படுகிறது. தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் தொல்லியல் சொத்தாக பராமரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே.... " என்று கூறியுள்ளார்.
Post a Comment
0 Comments