போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது... இதனால், விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு நம்புகிறது.. அதையே சொல்லியும் வருகிறது.ஆனால், இந்த சட்டங்களால் தங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை, மாறாக, குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் தங்கள் அச்சத்தை தெரிவித்து உள்ளனர்.. அதனால், இந்த புதிய சட்டங்கள் தங்களுக்கு வேண்டாம் என்றும், அவைகளை திரும்ப பெற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தீவிரமான போராட்டம்
இதை வலியுறுத்திதான், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்... புராரி மைதானம், திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 26ம் தேதி முதல் விவசாயிகளின் இந்த தீவிரபோராட்டம் நடந்து வருகிறது. இத்தகைய வலிமை மிக்க போராட்டங்களால் தலைநகரமே முடங்கிபோய் உள்ளது.
ஆதரவு
இதுபோன்ற சூழலில்தான், அதாவது கடந்த 7-ம் தேதி, டெல்லி எல்லையான சிங்குவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு செய்து தரப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.. மேலும் போராடிவரும் விவசாயிகளுக்கு தன்னுடைய முழுமையான ஆதரவையும் தெரிவித்து விட்டு வந்தார்.
வேண்டுகோள்
இதனையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்... மேலும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆம்ஆத்மி கட்சியினரும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் இந்த ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் முன்னதாக வேண்டுகோளும் விடுத்திருந்தார்.
ஒருநாள் உண்ணாவிரதம்
அதுமட்டுமல்ல, விவசாயிகள் போராட்டத்தில் நக்சலைட்டுகள் புகுந்து விட்டதாக அரசு கூறி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கெஜ்ரிவால், "போராட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள், டாக்டர்கள், வணிகர்கள், விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் என இத்தனை ஆதரவு அளித்துள்ளார்களே, அவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.. இந்நிலையில் தானே, விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்துள்ளார்.
தீவிரம்
விவசாயிகளுடன், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், 18 நாட்களை கடந்தும் போராட்டம் வெடித்தும் நீடித்தும் வரும் நிலையில், கெஜ்ரிவாலின் இந்த ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கவனத்தை பெற்று வருகிறது!
Post a Comment
0 Comments