உங்களது சித்திகளுக்கு மட்டுமல்ல... இந்திய அமெரிக்கர்களுக்கும் பெருமிதமான தருணம் என்று அமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றுள்ளார். அமெரிக்காவின் துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ்நாட்டை தாய்வழி பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ்.
அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோபிடன், துணை அதிபராகும் கமலா ஹாரீஸ் ஆகியோருக்கு அதிகாலையில் ட்விட்டர் மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இருவருக்கும் தனி தனி ட்விட்டர் பதிவுகள் மூலமாக பிரதமர் மோடி வாழ்த்து கூறியிருந்தார்.
ஜோ பிடனுக்கான பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தியில், துணை அதிபராக இருந்த காலத்தில் இந்தியா- அமெரிக்காவின் உறவுக்கு முக்கிய பங்களிப்பு செய்தீர்கள். இந்த உறவுகள் மேம்படைய உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸுக்கான வாழ்த்து செய்தியில், இந்த வெற்றியானது உங்களுடைய சித்திகளுக்கு மட்டுமல்ல.. இந்திய அமெரிக்கர்களுக்கும் பெருமைக்குரிய தருணம் இது. இந்தியா- அமெரிக்காவின் உறவுகள் மேலும் வலிமையடையும் என எதிர்பார்க்கிறேன் என கூறியிருந்தார் பிரதமர் மோடி.
சித்தி என குறிப்பிட்டது ஏன்?
கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக பிரசாரம் செய்த கமலா ஹாரிஸ் தமது குடும்பத்தினரை பற்றி குறிப்பிடுகையில் சித்திகளும் என தமிழில் கூறியிருந்தார். இந்த சித்தி என்ற உச்சரிப்பு அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. அதையே பிரதமர் மோடி தமது வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment
0 Comments