20 இந்திய வீரர்களை கொன்ற சீன ராணுவம்..பதிலடிக்கு தயாராகும் இந்தியா.
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்தினர் மீது சீனா கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் வீரமரணம் அடைந்தார்.
இந்த நிலையில் தற்போது சீனாவின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை முதலே சில ஊடகங்கள் 11 இந்திய வீரர்கள் பலியானதாக தெரிவித்து வந்தன.
ஆனால் ராணுவம், வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைகளில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்கிற விவரம் இடம்பெறவில்லை. இந்த நிலையில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதலில் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
அதேநேரத்தில் டெல்லி ஆங்கில பத்திரிகையாளர்கள் சிலர், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து குறைந்தபட்சம் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இதன் பின்னர் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சீனாவின் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 17 ராணுவத்தினரும் வீர மரணம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் மொத்தம் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
0 Comments