மத்திய அரசு தமது 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும் இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த மூன்று விவசாய சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என போர்க்குரல் உயர்த்தினர்.அத்துடன் பஞ்சாப்பில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் டெல்லி எல்லைகளில் மையம் கொண்டது. டெல்லி எல்லைகளில் கடும் குளிர், பனி, வெயில் என்றும் பாராமல் ஓராண்டு காலம் பல்வேறு போராட்டங்களை இடைவிடாமல் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முன்னெடுத்தனர்.
எத்தனை எத்தனை உயிர் பலிகள்
இந்த விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 800க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் இதுவரை கண்டிராத மிகப் பெரும் போராட்டம் இது. அத்துடன் நாடாளுமன்ற முற்றுகை, ஜந்தர் மந்தர் போராட்டம், பாரத் பந்த் என பல்வேறு வடிவங்களிலும் இந்த போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது ஜீப் ஏற்றி படுகொலை செய்த துயரம் கண்டு நாடு பதைபதைத்தது.
மத்திய அரசு பிடிவாதம்
ஆனால் மத்திய அரசு தொடக்கம் முதலே விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடம் இல்லை; திருத்தங்கள் மட்டுமே கொண்டுவருவோம் என சொன்னது. ஓராண்டுகாலம் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தியும் ஒருமுறை கூட பிரதமர் மோடி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. உச்சநீதிமன்றம்தான் தலையிட்டு மூன்று விவசாய சட்டங்களையும் நிறுத்தி வைத்தது.
பிரதமர் மோடி திடீர் வாபஸ்
தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும் சட்டசபைகளில் மூன்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றின. ஆனாலும் இம்மியளவும் கீழே வராமல் பிடிவாதம் காட்டியது மத்திய அரசு. இந்த நிலையில் இன்று திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு ஓராண்டு காலம் தீரமுடன் ஒற்றுமையுடன் போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்! உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்! இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Social Plugin
Social Plugin