வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வடதமிழக கடலோரத்தில் நிலவுவதால் சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நெருங்கும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்
இந்த நிலையில் நவம்பர் 10-ஆம் தேதி மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் நாளை மறுநாள் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடதமிழகம்
நாளை உருவாகும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வருகிற 11-ஆம் தேதி அதிகாலை வட தமிழக கடற்கரையை நெருங்கும். இதனால் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10 ,11ம் தேதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிக கனமழை
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் அறிவித்துள்ளது. இன்றைய தினம் தென் சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. விட்டு விட்டு அடிக்கும் மழையால் தண்ணீரை மோட்டார் போட்டு வெளியேற்றினாலும் மேலும் மேலும் அதிகரிக்கிறது.
Social Plugin
Social Plugin