Type Here to Get Search Results !

#LiveTamilTV

தேசிய பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக ராஜபக் ஷவின் குடும்ப ஆட்சி: அனுரகுமார திசாநாயக்க

நாட்டின் தேசிய வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் சூறையாடுவதற்காக அமெரிக்க பிரஜைகளை ஜனாதிபதி ஆசனத்திலும், நிதி அமைச்சு ஆசனத்திலும் அமரவைத்துள்ளதாகவும், இலங்கையில்  எரிவாயுவை பெற்றுக்கொள்ளும் உரிமமும், மிதக்கும் களஞ்சியசாலையை உருவாக்கும் அனுமதியும், கெரவலபிட்டிய யுகதனவி  மின் உற்பத்தி நிலையத்தின்  40 வீத உரிமத்தையும் அமெரிக்க நிறுவமொன்றுக்கு பெற்றுக்கொடுக்க அமெரிக்க பிரஜைகளான ராஜபக்ஷவினர் தீர்மானித்துள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றஞ்சுமத்தியுள்ளார். 

(Video Source: Newsfirst Lk)

ராஜபக்ஷவினரின் தீர்மானங்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் எனவும் அவர் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார், 

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் கொள்கையை கையாண்டு வருகின்றது.

துறைமுக நகர் திட்டத்தை உருவாக்கியதன் மூலமாக சீன  நிறுவனத்திற்கு பாரிய அளவிலான பலத்தையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். 

தற்போது திருகோணமலை எண்ணெய் குதங்கள் மற்றும் திருகோணமலை துறைமுகத்தை இந்திய தேவைகளுக்காக பெற்றுக்கொடுக்கும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் புதிதாக கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளை முழுமையாக அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அமைச்சரவை பத்திரமொன்றும் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது கெரவலபிட்டிய யுகதனவி  மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதமான உரிமத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் உடன்படிக்கை ஒன்றினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாது நாட்டின் எரிவாயு உற்பத்தியை முன்னெடுக்க சர்வதேச கேள்விமனுக்கோரல் ஒன்றினை விடுத்திருந்தனர்.

அதற்கான இறுதி தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது. இது எமது நாட்டின் மிக முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டமாகும், நாட்டுக்கான எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொள்ளும் பிரதான வேலைத்திட்டமாகும்.

அதற்கான மிதக்கும் களஞ்சியநிலையம் ஒன்றினை உருவாக்கும் கேள்விமனுக்கோறலும் இறுதிப்படுத்தப்பட்டிருந்த  நிலையில் தற்போது இதற்கான அனுமதியையும் கேள்விமனுக்கோரலில் பங்குபற்றாத அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எரிவாயுவை பெற்றுக்கொள்ளும் உரிமமும், மிதக்கும் களஞ்சியசாலையை உருவாக்கும் அனுமதியும், கெரவலபிட்டிய யுகதனவி  மின் உற்பத்தி நிலையத்தின் உரிமத்தையும் சேர்த்து அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அமெரிக்க பிரஜாவுரிமையை கொண்ட நிதி அமைச்சர் உள்ளிட்ட இந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளனர்.

மின் அமைச்சர் டலஸ் அழகபெரும உள்ளிட்ட பலருக்கு இந்த அமைச்சரவை பத்திரம் என்னவென்றே தெரியாது என்பது என்னால் உறுதியாக கூற முடியும். வலுசக்தி அமைச்சருக்கும் அதே நிலைமையே ஏற்பட்டுள்ளது. 

அரசாங்கத்தில் பலருக்கு தெரியாது மறைமுகமாக அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்படுகின்றது. பலர் ஏமாற்றப்பட்டு நிதி அமைச்சரின் தேவைக்கு அமைய இந்த அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கையில் அமெரிக்க தலையீடுகளை கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்த அமைச்சர்கள் இந்த அமைச்சரவையில் உள்ளனர், இந்த விடயத்தில் அவர்களின் நிலைப்பாடு என்னவென்பதை கூற வேண்டும்.

தேசியத்தை  உடல் பூராகவும் பூசிக்கொண்டு அரசியல் செய்பவர்கள் இன்று நாட்டினை கூறுபோடும் ஆட்சியை முன்னெடுத்து வருகிறனர். பூகோள அரசியலில் ஏற்பட்டுள்ள பொருளாதார போர்க்களத்தில் போட்டியிடும் மத்திய நிலையமாக இலங்கையை  உருவாக்கியுள்ளனர்.

ஒருபுறம் சீனாவிற்கு நாட்டின் வளங்கள் விற்கப்படுகின்றது, மறுபக்கம் இந்தியாவுக்கு தேசிய வளங்கள்  விற்கப்படுகின்றது, இப்போது அமெரிக்காவிற்கு நாட்டின் பொருளாதரத்தை தீர்மானிக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளனர்.

அமெரிக்க பிரஜைகளை ஜனாதிபதி ஆசனத்திலும், அவசர அவசரமாக நிதி அமைச்சு ஆசனத்திலும் அமரவைத்தது வேறு எதற்கும் அல்ல,நாட்டின் தேசிய வளங்களை அமெரிக்க நிறுவனங்களுக்கு பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்திலாகும்.

பாராளுமன்றதிற்கும், அமைச்சரைக்கும் அறிவிக்காது நாட்டின் தேசிய  வளங்களை ராஜபக் ஷவினரின் சொத்தாக நினைத்து விற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே இதனை எதிர்க்கும் தேசியவாதிகள், நாட்டினை நேசிக்கும் சகலரும் இனியும் ராஜபக் ஷ கொள்கையில் இருப்பதில் அர்த்தமில்லை. நாளாந்தம் இவர்கள் நாட்டின் சுயாதீனத்தை அழித்து வருகின்றனர். 

எனவே இந்த அமைச்சரவை பத்திரத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும், தேசிய வளங்களை ராஜபக் ஷவின் சொத்தாக நினைத்து விற்பதை கைவிட வேண்டும் என கண்டித்துக்கூறுகின்றோம். ஒரு குடும்பத்தின் தீர்மானத்திற்கான வளைந்து கொண்டிருக்கும் அமைச்சரவையே இன்று இயங்கிக்கொண்டுள்ளது எனவும் கூறினார். 

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big