தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு வாரமாக அதிமுகவில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்று முடிவு செய்யாமல் இழுபறி ஏற்பட்டது. கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இடையே கருத்து வேற்றுமை இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று 2வது முறையாக நடந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி அதிமுக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த தகவல் முதன் முதலாக அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியானது.
இதனை கட்சி செய்தி தொடர்பாளர் சசிரேகா உறுதி செய்தார்.தொடர்ந்து அதிமுக சட்டசபை தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சட்டசபை செயலரிடம் வழங்கினர்.
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 65 தொகுதிகளில் வென்று, பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சி தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பதில் இழுபறி நிலவியது
இந்நிலையில் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரைத் தேர்வு செய்ய நேற்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட 250 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Social Plugin
Social Plugin