பாராளுமன்ற அமர்வுகள் இன்று(21) புதன்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பல் குறித்து வெளிவரும் செய்தி தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வேதியல் அணு மூலக்கூறுகளுடன் சர்வதேச கப்பலொன்று வந்துள்ளமை உண்மையா? குறித்த நாட்டின் தூதரகத்தின் வலுயுறுத்தலுக்கு கட்டுப்பட்டு அரசாங்கம் இதனை கண்டுகொள்ளாது மௌனம் காக்கின்றதா? இது உண்மையென்றால் நாட்டின் நிலைமை என்னவாகும் என தெரியுமா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை மறுதினம் துறைமுக நகருக்கு கற்கை விஜயம் ஒன்றினை மேற்கொள்ள வருமாறு சீன தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்தும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
"சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. நேற்று 20 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சர்வதேச கப்பலொன்று வேதியல் அணு மூலக்கூறுகளுடன் உள்நுழைந்துள்ளது. இதனை இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கண்டறிந்துள்ளனர். இது உண்மையான செய்தியென நாம் நம்புகின்றோம், அது தவறான செய்தி சென்றால் அது குறித்து அரசாங்கம் அறிவிக்க முடியும். ஆனால் இலங்கை கடற்படைக்கு கூட இந்த கப்பலை பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது.
துறைமுகத்தில் இருந்து இந்த கப்பலை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இப்போது வரையிலும் இந்த விடயத்தில் அரசாங்கம் மௌன கொள்கையை பின்பற்றி வருகின்றது. ஒரு வெளிநாட்டு தூதரகத்தின் வலியுறுத்தலுக்கு கட்டுப்பட்டே அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டு வருகின்றது எனக் கூறப்படுகின்றது. எனவே இந்த செய்தியின் உண்மை தன்மையை நன்கு ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேதியல் அணு மூலக்கூறுககள் எமது நாட்டுக்குள் கொண்டுவருவது என்பது பாரிய அச்சுறுத்தலாகும். எனவே அரசாங்கம் உடனடியாக இதனை ஆராய்ந்து உண்மை பொய் தன்மைகளை ஆராய்ந்து உண்மையென்றால் உடனடியாக கப்பலை வெளியேற்ற வேண்டும், அல்லது இலங்கை கடற்படையை கொண்டு ஆராய அனுமதிக்க வேண்டும்" என அவர் சபையில் வலியுறுத்தினார்.
அதேபோல் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி சீன தூதரக அறிவித்தல் தொடர்பில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இருந்து எமது தொலைபேசிக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதனை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
கொழும்பு துறைமுக நகர் கற்கை விஜயம் ஒன்றினை சீன தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஏப்ரல் 22 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு வந்த பின்னர் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் எமது ஆட்சியிலும் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் நகர அபிவிருத்தி அதிகாரசபையே ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எமது நாட்டின் நிலப்பரப்பில் விஜயம் ஒன்றினை செய்ய சீன தூதரகம் எவ்வாறு ஏற்பாடுகள் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். இதனை கைவிடுமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்த வேளையில் குறித்த குறுஞ்செய்தி தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
Social Plugin
Social Plugin