நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது என நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் தனக்கு அதைப்பற்றி கவலையில்லை என்றும் தாம் மக்களுடன் கரம் கோர்த்துள்ளதாகவும் சீமான் கூறியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என மீண்டும் அவர் உறுதிப்படக் கூறியுள்ளார்.
ரஜினியும் கமலும் நண்பர்கள் என்றும் அவர்கள் இருவரும் இதுவரை திரைப்படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தனர் என்றும் அதேபோல் இப்போது அரசியல் படத்தில் நடிப்பதாகவும் விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் கொள்கை, பாதை, பயணம் தனித்தது என்றும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் கூட்டணி அமைப்பது என்பது அவர்கள் விருப்பம் என்றும் அதில் தாம் கருத்துக்கூற ஒன்றும் கிடையாது எனவும் தெரிவித்தார். மேலும், தங்களை பொறுத்தவரை காமராஜர் உள்ளிட்ட மக்கள் தலைவர்களை முன்னிறுத்தி மக்கள் பணிகளை செய்து வருவதாக சீமான் தெரிவித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் சீமான் தனித்து களம் கண்டு கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Social Plugin
Social Plugin