நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 54-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
தன் உணர்ச்சிமிகுந்த பேச்சாலும் உடல் மொழியாலும் லட்சக்கணக்கான தம்பிமார்களை தன்னுடன் அரவணைத்து அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்.
கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அவரால் ஏற்பட்ட தாக்கங்கள் ஏராளம்.
தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் அரனையூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த சீமான் இன்று உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் அறியப்படும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார். தமிழ் தேசியத்தை தனது கொள்கையாக கொண்டு வாழும் சீமான், மேடைதோறும் அதிலிருந்து பின்வாங்காமல் முழங்கி வருகிறார். வீழ்ந்துவிடாத வீரம் மண்டியிடாத மானம் என்ற கோஷத்துடன் கடந்த பத்தாண்டுகளுக்கு முன் தஞ்சாவூரில் நாம் தமிழர் இயக்கத்தை நாம் தமிழர் கட்சியாக மாற்றி கொடியை அறிமுகப்படுத்தினார் சீமான்.
தமிழக வாழ்வாதாரம்
ஈழப்பிரச்சனைகளை மட்டும் பேசாமல் தமிழக வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்தும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது சீமானின் குரல். ஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினோ ஆய்வு மையம், கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி கிணறு, சேலம் 8 வழிச்சாலை, காவிரி பிரச்சனை, மீத்தேன் எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு, என தமிழக பிரச்சனைகள் குறித்தும் சமரசத்திற்கு இடமின்றி போராட்டங்களை முன்னெடுத்தவர் சீமான். இதன் மூலம் சீமான் என்றால் ஈழமக்களுக்காக மட்டும் பேசுபவர் என்ற பிம்பத்தை உடைத்து தமிழக மக்களுக்காகவும் பேசுவேன் என்பதை வெளிப்படுத்தினார்.
இடிந்த கரை
கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகள் கயல்விழியுடன் சீமானுக்கு திருமணம் நடைபெற்றது. அடுத்த இரண்டு நாட்களில் செப்டம்பர் 10-ம் தேதி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மணக்கோலம் கூட மாறாத நிலையில் தனது மனைவியுடன் போராட்டக்களத்திற்கு சென்றிருந்தார் சீமான். இது நாம் தமிழர் கட்சி தம்பிகளுக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவினருக்கும் பெரும் வியப்பை அளித்தது.
2011 தேர்தல்
கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் சீமான் ஏற்படுத்திய தாக்கத்தால் திமுக இரண்டு முறையும் தோல்வியை தழுவ வேண்டிய நிலை உருவாகியது. ஊரெங்கும் திமுக, காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்த சீமான் இரண்டு தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டார். வரும் தேர்தலிலும் தனித்து தான் போட்டியிடுவோம் என்பதை அறிவித்து இப்போதே வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வருகிறார்.
வீரத்தமிழர் முன்னணி
நாம் தமிழர் கட்சியின் ஒரு அங்கமாக கடந்த 2015-ம் ஆண்டு பண்பாட்டு புரட்சி இல்லாமல் அரசியல் புரட்சி வெல்லாது எனக் கூறி வீரத்தமிழர் முன்னணியை தொடங்கினார் சீமான். இந்த அமைப்பு சார்பில் திருமுருகப் பெருவிழா, கண்ணகி பெருவிழா, கிராம பூசாரிகள் மாநாடு, மரபு வழி உணவு உள்ளிட்ட பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
Social Plugin
Social Plugin