வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளை இன்னும் 24 மணிநேரங்களில், சூறாவளி தாக்குமென்று, வழிமண்டல ஆராய்ச்சி திணைக்கத்தின் யாழ். பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சூறாவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும் கடற்றொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
தற்போது வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம், எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் தாழமுக்க வலையமாக மாற்றமடையும் சாத்தியமாக உள்ளதெனத் தெரிவித்த அவர், இது 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையக்கூடிய சாத்தியமும் உள்ளதெனவும் கூறினார்.
'இது தற்போது வடமேற்கு திசையாக நகர்ந்து, இலங்கையின் வடக்கு - கிழக்கு கரையோகத்தை அண்மிக்கும் சாத்தியக்கூறு உள்ளது. இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் கடும் மழை, சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் மழையும் பெய்யக்கூடும்.
'இது மட்டுமல்லாது, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும், சில பிரதேசங்களில் 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசும்' எனவும், அவர் தெரிவித்தார்.
தாழமுக்கம் காரணமாக, புத்தளத்தில் இருந்து பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னால் வரையா கடல் பரப்புக்களில் ஆங்காங்கே பலத்த மழை ஏற்படுமெனத் தெரிவித்த அவர், காற்றின் வேகமும் 70 தொடக்கம் 80 கிலேமீற்றர் வேகமாக அதிகரித்து காணப்படுமெனவும் கூறினார்.
அவ்வாறான வேளைகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுமெனத் தெரிவித்த அவர், எனவே பொது மக்களும் கடற்றொழில் சார்பானவர்கள் மற்றும் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
தற்போது திருகோணமலையில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் 6 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாற்றமடையும். 24 மணிநேரத்தில் சூறாவளியாக மாறி வடமேற்காக நகரவுள்ளது என, பிரதீபன் மேலும் கூறினார்.
Social Plugin
Social Plugin