தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் அனுமதி வழங்கி உள்ளன.
2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் 100க்கும் அதிகமானவை பறிமுதல் செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதன்பின்னர் இலங்கை- இந்தியா இடையே மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப எடுத்துச் செல்ல இலங்கை அரசு அனுமதித்தது. இதுவரை மொத்தம் 40 மீன்பிடி படகுகள் மட்டும் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. எஞ்சிய 121 படகுகள் கொரோனா காலம் என்பதால் மீட்கப்படாமல் இலங்கையிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் 121 தமிழக மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு அல்லது ஏலத்தில் விடுவதற்கான அனுமதியை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் வழங்கி உள்ளன. இலங்கை நீதிமன்றங்களின் இந்த உத்தரவு தமிழக மீனவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
மீன்பிடி படகுகளை அழிக்காமல் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை.
Social Plugin
Social Plugin