சானிட்டைசர் பூசிய கைகளால் பட்டாசு வெடிக்காதீர்கள் என்று மருத்துவத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
கொரோனா நோய் பரவல் காலத்தில் யாராவது வெளியே சென்று எதையாவது தொட்டால் உடனடியாக பாக்கெட்டில் உள்ள சானிடைசரை வைத்து கைகளில் பூசிக்கொண்டால் கிருமி அழிந்துவிடும். இவ்வாறு பலரும் செய்கிறார்கள். கையை கழுவுவது போல சானிட்டைசர் போட்டுக் கொள்வதும் ஒரு வாழ்வியல் பழக்கமாக மாறி விட்டது.
இந்த நிலையில்தான், பட்டாசு வெடிக்கும் போதும், மத்தாப்பூ உள்ளிட்ட பிற பட்டாசுகளை பயன்படுத்தும்போதும் கையில் சானிட்டைசர் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவத் துறை வல்லுனர்கள்.
ஏனெனில் சானிட்டைசர் சிறப்பாக செயல்படுவதற்காக அதில் ஆல்கஹால் கலக்கப்படுகிறது. ஆல்கஹால், எளிதில் தீப்பற்றக் கூடிய ஒரு பொருள். எனவே, கையில் சானிட்டைசர் போட்டுக் கொண்டு, நாம் நெருப்புடன் புழங்க நேரிடும் போது தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் எச்சரிக்கிறார்கள். பட்டாசு வெடிக்கும் நாட்களில் மட்டும் சானிட்டைசருக்கு பதிலாக, கையில் நன்கு சோப்பு போட்டு கழுவி கொள்ளவும்.
சானிட்டைசர் கைகளில் படிந்து இருக்கும் என்பதால், அதை பயன்படுத்தி சில மணி நேரம் ஆகியிருந்தாலும், பட்டாசு வெடிக்க வேண்டாம். தீ பரவ வாய்ப்பு உண்டாம். எனவே, பட்டாசு வெடிக்கும் நாள் முழுக்கவே சோப்பு போட்டு மட்டும் கை கழுவுங்களேன்.
இதனிடையே, கையில் சானிடைசர் போட்டுக்கொண்டு தீபமேற்றுவது போன்று ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை அடிக்கடி பார்க்க முடிகிறது. இது போன்ற விளம்பரங்கள் மக்களிடம் அறியாமையை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள் மருத்துவத் துறையினர்.
சானிட்டைசர் போட்டுக்கொண்டு பட்டாசு வெடிப்பது மட்டும் தவறு கிடையாது, விளக்கு ஏற்றுவதும் தவறுதான். எனவே, தீபாவளி நாளில் மக்கள் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த தகவலை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாட்ஸ்அப் மூலமாக கொண்டு சென்று சேர்த்துவிடுங்கள் மக்களே.
Social Plugin
Social Plugin