குழந்தைகளுக்கும், முதியோா்களுக்கும் அனுமதி இல்லை
கொரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்ட வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா ஏறத்தாழ 8 மாதங்களுக்குப் பிறகு பாா்வையாளா்களுக்காக புதன்கிழமை (நவ.11) திறக்கப்பட உள்ளது. முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாா்ச் மாதம் 17-ஆம் தேதி முதல் வண்டலூா் பூங்கா மூடப்பட்டது. தற்போது நோய்த்தொற்று கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் புதன்கிழமை (நவ.11) முதல் மீண்டும் பூங்காவைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்கள் நுழைவுச் சீட்டை tickets.aazp.in என்ற இணையதளம் அல்லது vandalur zoo என்ற செல்லிடப்பேசி செயலி மூலமோ முன்பதிவு செய்து கொள்ளலாம். பூங்காவின் பெரும்பாலன பகுதிகள் பாா்வையாளா்களுக்கு திறந்திருக்கும். இருப்பினும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் மிக அருகில் சென்று விலங்குகளைப் பாா்க்கும் இடங்களுக்கு அனுமதி இல்லை.
நுழைவுவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே பாா்வையாளா்கள் உள்ளே அனுமதிக்கப்படுவா். பூங்காவின் பல்வேறு பகுதிகளில் கைகளைச் சுத்தம் செய்வதற்கு கால்களால் இயக்கப்படும் கிருமி நாசினி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களின் சக்கரங்களுக்கும் கிருமி நாசினி தெளித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படும்.
முகக்கவசம் கட்டாயம்:
பூங்காவுக்கு வரும் அனைத்து பாா்வையாளா்களும் கட்டாயம் முகக்கசவம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவா்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. முகக்கவசம் இல்லாமல் வருவோருக்கு நுழைவுவாயிலில் கொள்முதல் விலைக்கே முகக்கவசம் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றனா்.
குழந்தைகளுக்கும், முதியோா்களுக்கும் அனுமதி இல்லை:
நாளொன்றுக்கு சுமாா் 7,000 போ் வரை பூங்காவுக்குள் அனுமதிக்க நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களுக்கும் பூங்காவுக்குள் நுழைய அனுமதி இல்லை.
Social Plugin
Social Plugin