பிரான்ஸில் தேவாலயம் ஒன்றில் இன்று காலை நடத்தப்பட்ட கத்திவெட்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலர் காயமடைந்துள்ளனர். நாட்டின் தெற்கு கடற்கரை நகரமான நீஸில் (Nice) அமைந்துள்ள நொத்தடாம் தேவாலயம் (Notre-Dame basilica) அருகிலேயே நபர் ஒருவரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
பொதுமக்களைக் கண்டபடி கத்தியால் வெட்டிய நபர் பின்னர் பொலீஸார் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களது விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. எனினும் தேவாலயத்தின் காவலர் மற்றும் இரு பெண்கள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்று முற்கொண்டு வெளியான செய்திகள் தெரிவித்தன.
கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடைபெற்ற நகரின் மத்திய பகுதியைப் பொலீஸார் சுற்றிவளைத்துள்ளனர். அம்புலன்ஸ் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் அங்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர்.
அவசர நெருக்கடி காலப் பணியகம் ஒன்று அங்கு திறக்கப்பட்டிருக்கிறது. அதிபர் மக்ரோன், பிரதமர் ஆகியோர் சம்பவம் நடந்த நீஸ் நகருக்கு விரைகின்றனர் என்று பாரிஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
"சார்ளி ஹெப்டோ" கேலிச் சித்திரங்கள் தொடர்புடைய தாக்குதல் சம்பவங்களை அடுத்து நாடு முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று முழு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.
இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிவதால் விசேட பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளைத் தொடக்கி உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Social Plugin
Social Plugin